தமிழகத்தில் கரோனா 2-வது அலை தீவிரமடைந்து வருகிறது. கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கரோனா தடுப்பு நடவடிக் கைகளை தீவிரப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, அரசு அலுவல கங்களில் கரோனா பரவலை கட்டுப்படுத்த அந்தந்த துறையைச் சேர்ந்தவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் துறையினர் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை வாங்கவும், புகார் சம்பந்தமாக பொதுமக்களிடம் விசாரணை நடத்தும்போது காவல் நிலையங்களுக்கு உள்ளே பொதுமக்களை அனுமதிக்காமல் வெளியே பந்தல்போட்டு அங்கேயே புகார் மனுக்களை பெற்று, வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் முகப்பில் பந்தல் அமைத்து காவலர்கள் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை நேற்று முதல் பெற்று வருகின்றனர். கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், தினசரி காவல் நிலையங்களில் கிருமி நாசினி கொண்டு தூய்மைப் படுத்தவும், புகார் அளிக்க வருவோர்களுக்கு உடல் வெப்பம் பரிசோதனை செய்து, முகக்கவசம் அணிந்தபடி காவல் நிலையத்துக்குள் வர வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.