தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரிப்பதை தடுக்க இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பேருந்துகள் இயக்கமும் நிறுத்தப்பட்டது.
இதனால், வெளியூர்களில் பணிபுரிபவர்கள், மருத்துவத் தேவைகள் உள்ளிட்ட காரணங்களுக்காக சேலம் வந்தவர்கள், சொந்த ஊர் திரும்ப வசதியாக, சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, முக்கிய நகரங்கள் அனைத்துக்கும் இரவு 10 மணிக்கு சென்றடையும் வகையில் பேருந்துகள் இயக்க நேரம் நேற்று முதல் மாற்றப்பட்டது.
சென்னை செல்லும் இறுதி பேருந்துகள் மதியம் 2 மணிக்கும், பிற நகரங்களுக்கு செல்லும் பேருந்துகள் அதிகபட்சம் மாலை 6 மணிக்கும் இயக்கப்பட்டன. மாலை 6.30 மணிக்கு மேல் முக்கிய நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கம் இருக்காது என்பதால், வெளியூர் செல்பவர்கள் எண்ணிக்கை சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று மாலை வழக்கத்தை விட அதிகரித்து இருந்தது.
இதனால், பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்ததோடு, கூட்டம் காரணமாக பேருந்துகளில் இடம் பிடிக்க பயணிகள் அலைமோதியதால் பரபரப்பு நிலவியது.
மாலை நேரத்தில் புறப்பட்ட பேருந்துகள் அனைத்திலும் பயணிகள் கூட்டம் நிரம்பியிருந்தது. இரவு 8 மணிக்கு மேல் பேருந்துகள் இயக்கம் வெகுவாக குறைந்ததால், பயணிகள் நடமாட்டம் வெகுவாக குறைந்து, பேருந்து நிலையம் வழக்கமான பரபரப்பின்றி வெறிச்சோடியது.