ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளுக்கு தடை நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து, அண்ணா பூங்கா அமைந்துள்ள பகுதியில் உள்ள கடைகள் மூடப்பட்டன. இதனால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் பூங்கா சாலை வெறிச்சோடி காணப்பட்டது. 
Regional02

பயணிகளுக்கு தடையால் களையிழந்த ஏற்காடு : வர்த்தகம் பாதிப்பால் தொழிலாளர்கள் கவலை

செய்திப்பிரிவு

கரோனா தடுப்பு நடவடிக்கையாக பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், எப்போதும் பரபரப்பாகவும், பயணிகள் கூட்டமாகவும் இருக்கும் ஏற்காடு சுற்றுலா தலம் வெறிச்சோடி காணப்பட்டது. வர்த்தகம் பாதிப்பால் சுற்றுலா சார்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகளுக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு சுற்றுலா தலத்தில் நேற்று முதல் அரசின் தடை உத்தரவு அமலுக்கு வந்தது.

ஏற்காட்டில் பயணிகள் வருகையால் எப்போதும் களைகட்டி காணப்படும் தோட்டக்கலைத் துறையின் அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட 6 பூங்காக்களும் நேற்று மூடப்பட்டதால் வெறிச்சோடியது. மேலும், பயணிகளை ஈர்க்கும் படகு இல்லமும் மூடப்பட்டது.

மேலும், காட்சிமுனைப் பகுதிகள் உள்ளிட்ட ஏற்காட்டில் உள்ள சுற்றுலா இடங்கள் யாவும் மூடப்பட்டன. தமிழ்நாடு ஓட்டல் உள்ளிட்ட சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகள், பண்ணை வீடுகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன.

ஏற்காடு வரும் வெளியூர் பயணிகளை கண்காணிக்கும் வகையில் ஏற்காடு மலையடிவாரத்தில் உள்ள சோதனைச் சாவடியில் போலீஸார் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

உள்ளூர் மக்களிடம் அடையாள ஆவணங்களை சரிபார்த்து ஏற்காடு மலைக்கு செல்ல போலீஸார் அனுமதித்தனர்.

வெளியூரைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தடை உத்தரவு தெரியாமல் வந்த வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

சுற்றுலா தொழிலை மட்டுமே நம்பிபுள்ள ஏற்காட்டில் பயணிகளுக்கு தடையால் சுற்றுலா சார்ந்த வர்த்தக நிறுவனங்கள், சிறு கடைகள், தங்கும் விடுதிகள், உணவகங்களில் வர்த்தகம் முழுவதும் பாதிக்கப்பட்டது. இதனால், சுற்றுலா சார்ந்த தொழிலாளர்கள் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக வேதனை தெரிவித்தனர்.

தினசரி நூற்றுக்கணக்கான கார்கள் வந்து செல்லும் நிலையில், நேற்று உள்ளூர் வாகனங்கள் மட்டுமே சாலையில் ஓடியதால் சாலைகள் பரபரப்பின்றியும், போக்குவரத்து நெரிசலின்றியும் காணப்பட்டன.

கரோனா பரவல் அச்சம் காரணமாக உள்ளூர் மக்களின் நடமாட்டமும் குறைவாக இருந்ததால், முழு ஊரடங்குபோல ஏற்காடு காணப்பட்டது.

இதுதொடர்பாக உள்ளூர் மக்கள் சிலர் கூறும்போது, “ஏற்காட்டில் சுற்றுலா மற்றும் விவசாயம் தவிர பிறபணிகள் ஏதுமில்லை. விவசாயப் பணிகளை, அந்தந்த மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே மேற்கொள்கின்றனர். கோடைக்காலம் என்பதால், நாள்தோறும் பயணிகள் சுமார் 10 ஆயிரம் பேர் வரை ஏற்காடு வந்து செல்வார்கள். தற்போதைய தடையால் பயணிகள் வருகையின்றி களையிழந்தது” என்றனர்.

SCROLL FOR NEXT