தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே பெண்ணிடம் ரூ.1 லட்சம் மதிப்பிலான தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற 2 பேரை போலீஸார் விரட்டிச் சென்று கைது செய்தனர்.
ஆறுமுகநேரி குருஸ்நகரைச் சேர்ந்தவர் ஜவஹர். இவர் தனது மனைவி ரோஸ்மேரியுடன் நேற்று முன்தினம் மாலை இருசக்கர வாகனத்தில் ஆழ்வார்திருநகரி பண்ணைவிளை மொட்டையாசாமி கோயில் அருகே சென்று கொண்டிருந்தார். நம்பர் பதிவு இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவர்களை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி ரோஸ்மேரி அணிந்திருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து, ஆழ்வார்திருநகரி போலீஸார், மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்டம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். அப்போது, பைக்கில் வேகமாகச் சென்ற இருவரை, சந்தேகத்தின்பேரில் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் போலீஸார் பின்தொடர்ந்து சென்றனர். வசவப்பபுரம் நோக்கி அந்த பைக் சென்றதால், முறப்பநாடு போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 2 பேரையும் வசவப்பபுரம் அருகே முறப்பநாடு போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.
மேலப்பாளையம் மைதீன்லெப்பை மகன் பெரோஸ்கான் யாசர் (26), சாம் சாகபுதின் மகன் அப்துல் பாசித் (24) ஆகிய, அவர்கள் இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை மீட்டனர். அவர்கள் வந்த பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
பெரோஸ்கான் யாசர் மீது திருநெல்வேலி டவுண், ஜங்ஷன், பேட்டை, தச்சநல்லூர் மற்றும் வீரவநல்லூர் காவல் நிலையங்களில் மொத்தம் 9 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. நகை பறிப்பில் ஈடுபட்ட இருவரையும் சிறிது நேரத்தில் கைது செய்த போலீஸாரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.