Regional03

‘தொழிற்சாலைகளில் கரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளை விழிப்புடன் கடைபிடிக்க வேண்டும்’ :

செய்திப்பிரிவு

தொழிற்சாலைகளில் கரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளை விழிப்புடன் கடைபிடிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத் தலைவர் ஏ.சக்திவேல் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "கரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால், தொற்று எண்ணிக்கை மற்றும் இறப்புகள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளன. இதனைக் கருத்தில்கொண்டு மத்திய, மாநில அரசுகள் படிப்படியாக ஊரடங்குகளை அறிவித்து வருகின்றன. தமிழகத்தில் கடந்த மாதத்தில் 400 முதல் 500 என இருந்த மொத்த தொற்று பாதிப்புகள், தற்போது நாளொன்றுக்கு 10 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால், மேலும் ஒரு முழு ஊரடங்கு என்ற நிலைக்கு தள்ளப்படுவோம். இது நினைத்துப் பார்க்க இயலாத பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தும். பின்னலாடைத் தொழிலை, மிகவும் அத்தியாவசியத் தொழிலாக அறிவித்து, கரோனா தொற்றின் காரணமாக அரசு விதிக்கும் பொதுமுடக்கத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

இப்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம், அரசின் முந்தைய மற்றும் சமீபத்திய வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு தொழிற்சாலைகளிலும் முறையான பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சோதனைகளை மேற்கொண்டு மருத்துவக் குறிப்புகளையும், பாதுகாப்பு விதிமுறைகளையும் விழிப்புடன் கடைபிடிக்க வேண்டும். இனிவரும் நாட்களில் மிகுந்த கவனத்துடன் உடல் வெப்பத்தை பரிசோதிப்பது, உடல் சோர்வு, காய்ச்சல், சளி போன்ற எளிதில் அறியக்கூடிய அறிகுறிகளுடன் பணிபுரிய வருபவர்களை உடனடியாக மருத்துவமனையை நாடச் செய்வது, முகக் கவசம் அணிவது, கிருமி நாசினி தெளிப்பது, சீரான இடைவெளியில் கைகளைக் கழுவுவது உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களின் அவசியத்தை உணர்த்தி, எந்தவித சமரசமும் இன்றி தொழிலாளர்களை கடைபிடிக்க செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT