Regional03

திருப்பூரில் இருந்து கோவை, ஈரோட்டுக்கு - இன்றுமுதல் இரவு 8 மணி வரை மட்டும் பேருந்து :

செய்திப்பிரிவு

திருப்பூரில் இருந்து கோவை, ஈரோட்டுக்கு இன்று (ஏப்.20) முதல் இரவு 8 மணி வரை மட்டும் பேருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திருப்பூர் போக்குவரத்துத் துறையினர் கூறும்போது, "இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நேரத்தில் பொது போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிகாலை 4 முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இயங்கும். தொழில் நகரமான திருப்பூரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு தினமும் 300-க்கும் மேற்பட்ட பேருந்துகள் சென்று கொண்டிருக்கின்றன. தற்போது விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாட்டின் காரணமாக, அதிகாலை 4 மணியில் இருந்து தொலைதூர மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதிகளவு பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.

இதேபோல, சற்று அருகில் உள்ள மாவட்டங்களான சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சீரான இடைவெளியிலும், கூட்டத்தின் அடிப்படையிலும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அனைத்து பேருந்துகளும் இரவு 10 மணிக்குள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்றடையும் வகையில் அனுப்ப போக்குவரத்துத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர். திருப்பூரில் இருந்து ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் ஆகும் என்பதால், அதிகபட்சம் திருப்பூரில் இருந்து இரவு 8 மணி வரை ஈரோடு மற்றும் கோவைக்கு பேருந்துகள் இயக்கப்படும்" என்றனர்.

SCROLL FOR NEXT