கரோனா பரவலை தடுக்க இன்று (20-ம் தேதி) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையடுத்து, அரசுப் போக்குவரத்துக் கழக சேலம் கோட்டம் சார்பில் முக்கிய ஊர்களுக்கு செல்லும் இறுதி பேருந்துகளின் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசுப் போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு இரவு நேர ஊரடங்கு நேரத்துக்கு முன்பாக பேருந்துகள் சென்றடையும் வகையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை செல்லும் இறுதி பேருந்துகள் மதியம் 2 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்படும். விழுப்புரத்துக்கு மாலை 6 மணி, சிதம்பரத்துக்கு மாலை 5 மணி, கடலூருக்கு மாலை 5 மணி, திருவண்ணாமலைக்கு மாலை 5 மணி, திருப்பத்தூருக்கு மாலை 6.30 மணி, வேலூருக்கு மாலை 4.30 மணி, ஓசூருக்கு மாலை 6.30 மணி, பெங்களூருக்கு- மாலை 7 மணி, மைசூருக்கு மாலை 5 மணி, கோயமுத்தூருக்கு மாலை 6 மணி, மதுரைக்கு மாலை 5.30 மணி, திருப்பூருக்கு மாலை 7 மணி, திருச்சிக்கு மாலை 6 மணிக்கும் சேலத்தில் இருந்து பேருந்துகள் புறப்படும்.
இந்த நேரத்தைக் கவனத்தில் கொண்டு பயணிகள் அனைவரும் பயண நெரிசலை தவிர்த்து பயணம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தருமபுரி
இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்-தருமபுரி மண்டல பொது மேலாளர் ஜெயபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு, இன்று (20-ம் தேதி) முதல் தினமும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளது. எனவே, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்டம்-தருமபுரி மண்டலம் மூலம் பொதுமக்கள் நலன் கருதி தருமபுரி மாவட்ட பேருந்து நிலையங்களில் இருந்து இரவு இறுதிப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. தருமபுரி புறநகர் பேருந்துநிலையத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு இரவு 9 மணிக்கும், ஓசூர், பெங்களூருவுக்கு 7.30 மணிக்கும், சென்னைக்கு பகல் 2 மணிக்கும், திருப்பத்தூர், சேலத்துக்கு 8.30 மணிக்கும், மேட்டூருக்கு 8 மணிக்கும், பென்னாகரம், பாலக்கோடு, பொம்மிடிக்கு 9.15 மணிக்கும், அரூருக்கு 9 மணிக்கும் இறுதிப் பேருந்துகள் புறப்பட்டுச் செல்லும். பென்னாகரம் பேருந்து நிலையத்தில் இருந்து தருமபுரிக்கு இரவு 9.15 மணிக்கும், மேச்சேரிக்கு 8.30 மணிக்கும், பாலக்கோடு பேருந்து நிலையத்தில் இருந்து தருமபுரிக்கு 9.15 மணிக்கும், ஓசூருக்கு 8.15 மணிக்கும், பொம்மிடி பேருந்து நிலையத்தில் இருந்து தருமபுரிக்கு 9 மணிக்கும், சேலம், ஓமலூருக்கு 8 மணிக்கும், அரூர் பேருந்து நிலையத்தில் இருந்து தருமபுரி, ஊத்தங்கரைக்கு 9 மணிக்கும், சேலத்துக்கு 8 மணிக்கும், திருவண்ணாமலைக்கு 7.30 மணிக்கும் பேருந்துகள் புறப்பட்டுச் செல்லும். எனவே, பேருந்து பயணிகள் இதற்கேற்ப திட்டமிட்டு பயண திட்டங்களை வகுத்து ஊர் திரும்பி பயன்பெற வேண்டும்.
கிருஷ்ணகிரியில் பேருந்து வசதி
இதேபோல் ஓசூர் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து தருமபுரிக்கு இரவு 7.30 மணிக்கும், கிருஷ்ணகிரிக்கு இரவு 8.45 மணிக்கும், சேலத்திற்கு மாலை 6.30 மணிக்கும், பெங்களூருக்கு இரவு9 மணிக்கும், வேலூர் மற்றும் திருவண்ணாமலைக்கு மாலை 6மணிக்கும் புறப்படும் வகையில்பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், ஊத்தங்கரை பேருந்து நிலையத்தில் இருந்து ஓசூருக்கு இரவு 7.30 மணிக்கும், திருவண்ணாமலைக்கு இரவு 8.30 மணிக்கும், சேலத்திற்கு இரவு 7.30 மணிக்கும், திருப்பத் தூருக்கு இரவு 9 மணிக்கும் புறப்படும் வகையில் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதே போல் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து தருமபுரிக்கு செல்ல இரவு 8.30 மணிக்கும், ஓசூர் மற்றும் பெங்களூருக்கு இரவு 7.45 மணிக்கும் புறப்படும் வகையில் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் பேருந்துகளில் பயணம் செய்யும் போது முகக்கவசம் அணிந்தும், சமூக இடை வெளியை கடைப்பிடித்தும் பயணம் செய்ய வேண்டும். அத்துடன் பொதுமக்களின் பாதுகாப்பை பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உறுதி செய்ய வேண்டும்.