மேட்டூர் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி இருப்பு இல்லை என எழுதி ஒட்டப்பட்டிருந்தது. இதனால், தடுப்பூசி செலுத்தும் இடம் வெறிச்சோடி இருந்தது. 
Regional01

சேலம் மாவட்டத்தில் தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு - அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு :

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தொற்றை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. அரசு மருத்துவமனைகளில், கோவிஷீல்டு, கோவேக்சின் என இருவகை தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக சேலம் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் அதிக ஆர்வமாக வருகின்றனர். இதனால், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் 45-வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமார் 4.50 லட்சம் பேர் உள்ள நிலையில், நேற்று முன்தினம் வரை கோவிஷீல்டு முதல் தவணையாக 2 லட்சத்து 5 ஆயிரத்து 976 பேரும், 2-வது தவணையாக 41 ஆயிரத்து 417 பேரும், கோவேக்சின் முதல் தவணையாக 32 ஆயிரத்து 294 பேரும், 2-வது தவணையாக 1,146 பேரும் போட்டுள்ளனர்.

இந்நிலையில், தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், தடுப்பூசி செலுத்த செல்லும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.

மேட்டூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், நேற்று கரோனா தடுப்பூசி (கோவேக்சின்) இருப்பு இல்லை என எழுதி ஒட்டப்பட்டது.

இதுதொடர்பாக பொதுமக்கள் சிலர் கூறும்போது, “மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கரோனா தடுப்பூசி 2-வது தவணை மட்டுமே செலுத்தப்படுகிறது. முதல் தவணை தடுப்பூசி போடச் செல்பவர்களுக்கு பல இடங்களில் இருப்பு இல்லை எனக் கூறி திருப்பி அனுப்புகின்றனர்” என்றனர்.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, “சேலம் மாவட்டத்துக்கு தினசரி சுமார் 12 ஆயிரம் தடுப்பூசி தேவைப்படும். சில மருத்துவமனைகளில், அதிகமானவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதனால், அங்கு தடுப்பூசி இருப்பு இல்லை. இதேநிலை மேட்டூர் மருத்துவமனையில் ஏற்பட்டது. மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு அங்கு மீண்டும் தடுப்பூசி வழங்கப்பட்டது. தற்போது வரை தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்ட இடங்களில் பிரச்சினையை சமாளித்துள்ளோம். தேவையான தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.

SCROLL FOR NEXT