எண்ணேகொல் கால்வாய் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத் தலைவர் தேவராஜ் தலைமை வகித்தார். இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர், விவசாயிகளின் பிரச்சினை, இன்றைய அரசியல் நிலை குறித்து விளக்கிப் பேசினார். சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் கண்ணு, மாவட்டக்குழு தீர்மானங்களை விளக்கிப் பேசினார்.
கூட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிக ளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங் களும் திரும்பப் பெற வேண்டும். இரவு நேரங்களில் ஆடு, மாடுகள் திருடு போவதை, காவல்துறையில் புகார் கொடுத்தாலும், எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே, புகார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும். பர்கூர் பகுதியில் மா விளைச்சல் இவ்வாண்டு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். எண்ணேகொல் கால்வாய் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், வட்டச் செயலாளர் முனிசாமி, விவசாய தொழிலாளர் சங்க வட்ட பொருளாளர் பவுன்ராஜ், வட்டத் தலைவர் திருப்பதி, செயலாளர் குணசேகரன், இளைஞர் மன்ற வட்டச் செயலாளர் ரஜினி மற்றும் வட்டக்குழு உறுப்பினர்கள் மாரியப்பன், சீனிவாசன், மணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.