திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆயுஷ் திட்டத்தின் கீழ், சித்தமருத்துவம், ஹோமியோபதி, யுனானி ஆகிய துறைகளின் மூலம் கரோனா வைரஸ் 2-ம் கட்ட பரவலை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஆட்சியர் வே.விஷ்ணு தொடங்கி வைத்தார். 
Regional01

அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் - கபசுரக் குடிநீர் வழங்க நடவடிக்கை : நெல்லை மாவட்ட ஆட்சியர் தகவல்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கபசுரக் குடிநீர்வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆயுஷ் திட்டத்தின் கீழ், சித்த மருத்துவம், ஹோமியோபதி, யுனானி ஆகிய துறைகளின் மூலம் கரோனாவைரஸ் 2-ம் கட்ட பரவலை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்சியர் வே.விஷ்ணு,வருவாய் அலுவலர் ஆ.பெருமாள் ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். அரசுஅலுவலர்கள், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீரை ஆட்சியர் வழங்கினர். பின்னர் அவர் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டம்முழுவதும் போர்க்கால அடிப்படையில் தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மருத்துவப் பரிசோதனைகளை அதிகப்படுத்த ஆணையிடப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் என அனைத்து பகுதிகளிலும் கபசுரக் குடிநீர்வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.

முகக்கவசம் அணியாமல் செல்வோர்மீது காவல்துறை ,வருவாய்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை ஆகிய 4 துறைகளின் மூலம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. வெளியில் சென்று வீடு திரும்பும்போதும் கை,கால்களை சுத்தமாக சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். பொது இடங்களில் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும.

தொற்றுநோய் அறிகுறிகள் ஏற்பட்டிருப்பின் காலதாமதம் செய்யாமல் மாவட்டத்தில் இயங்கி வரும் 43 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 9 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மாநகராட்சி பகுதிகளில் இயங்கி வரும் தனியார் பரிசோதனை நிலையங்களான ஆர்த்தி ஆய்வகம், லிபர்ட்டி ஆய்வகம், ஷிபா ஆய்வகம் மற்றும் பாரத்ஸ்கேன்ஸ் ஆய்வகம் ஆகியவற்றில் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

கரோனா வைரஸ் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெறுவதற்கும், பிற தகவல்களுக்கும், புகார்கள் அளிக்கவும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் கட்டுப்பாட்டு மையத்தை 0462 - 2501012 அல்லது 1077 (கட்டணமில்லா தொலைபேசி எண்), மற்றும் 0462-2501070 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் கைபேசி எண்கள்6374013254 மற்றும் 94999338930-க்கு குறுஞ்செய்திமூலமாகவும் தகவல் அளிக்கலாம். மக்கள் ஒத்துழைப்புடன் அரசு விதித்துள்ள, நிலையான வழிகாட்டுதல் வழிமுறைகளை 100 சதவீதம் பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அரசு சித்த மருத்துவக்கல்லூரி முதல்வர் எம்.திருத்தணி,மாவட்ட விரிவாக்க கல்வி அலுவலர் அப்துல் காதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT