தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற ஆனந்தன் மீது போலீஸார் தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தினர். படம்: என்.ராஜேஷ் 
Regional03

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன் மளிகைக்கடைக்காரர் தீக்குளிக்க முயற்சி :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்அலுவலகம் முன் மளிகைக்கடைக்காரர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கீழ தட்டப்பாறையைச் சேர்ந்தவர் என்.ஆனந்தன் (44). அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று தனது மனைவி ராமலெட்சுமி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். பிரதான நுழைவு வாயில் அருகே பாட்டிலில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைக்க முயன்றார்.

இதனைக் கண்டதும் அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸார் ஓடி வந்து அவரை தடுத்து, அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, ஆனந்தன் கண்ணீர்மல்க கூறியதாவது:

கீழத்தட்டப்பாறையில் மளிகைக்கடை நடத்தி வருகிறேன். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தனியார் வங்கி கடன் மூலம் ஒருலாரியை வாங்கி தொழில் செய்து வந்தேன். லாரி சரியாக ஓடாததால் அதனை மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்த நியாயவிலைக் கடைஊழியர் ஒருவரிடம் கொடுத்துவிட்டேன்.

வங்கிக் கடனுக்கான மாதத்தவணையை அவர் செலுத்திவிடுவதாக கூறினார். தவணையை அவர் செலுத்தவில்லை. காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், வங்கியில் இருந்து எனது வீட்டை ஜப்தி செய்வதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்தால் அனுமதி மறுக்கின்றனர். எனவே, சாவதை தவிர எனக்கு வேறு வழியில்லை என்பதால் தீக்குளிக்க முயன்றேன் என்றார் அவர். இது தொடர்பாக காவல் துறைஅதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும், உரியநடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என ஆனந்தனை போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

SCROLL FOR NEXT