Regional02

அவசியப்படுவோருக்கு மட்டுமே - கண்புரை அறுவைசிகிச்சை செய்யப்படும் : காஞ்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் தகவல்

செய்திப்பிரிவு

காஞ்சி அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 125 பேர், உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கண்புரை பாதிப்புக்கு சிகிச்சை பெறுவதற்காக ஏராளமான நோயாளிகள் வருகின்றனர். இவ்வாறு வருவோரை, கரோனா தொற்றைக் காரணமாகக்கூறி, உரிய சிகிச்சைஅளிக்காமல் திருப்பி அனுப்பப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஆனால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் வருவதாலும், அதிக இடவசதி தேவைப்படுவதாலும், கண்புரை சிகிச்சைக்கு வருவோரில், அவசியம் அறுவைசிகிச்சை தேவைப்படுவோருக்கு மட்டும் சிகிச்சை அளிப்பதாகவும், மற்றவர்களின் பாதிப்புக்கு ஏற்றவாறு சிகிச்சை அளிப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மருத்துவமனை கண்காணிப்பாளர் கல்பனா கூறும்போது, "அரசு மருத்துவமனை கரோனா தொற்று பரப்பும் இடமாக மாறிவிடக்கூடாது என்பதற்காக, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம். கண்புரை பாதிப்புக்காக வரும் நோயாளிகளில், உடனடியாக அறுவைசிகிச்சை தேவைப்படுவோருக்கு மட்டும் அறுவைசிகிச்சை அளிக்கிறோம். லேசான பாதிப்பு உள்ளவர்களை, சூழ்நிலையைப் பொருத்து குறிப்பிட்ட நாளில் சிகிச்சைக்கு வருமாறு கூறுகிறோம். எனவே, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்றார்.

SCROLL FOR NEXT