மதுரையில் நடைபெற்ற அமைப்பு சாரா பெண் தொழிலாளர்கள் சட்ட விழிப்புணர்வு முகாமில் பங்கேற்ற தொழிலாளர்கள். 
Regional03

குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயிக்க அமைப்புசாரா தொழிலாளர் வலியுறுத்தல் :

செய்திப்பிரிவு

அமைப்புசாரா தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.21 ஆயிரம் என நிர்ணயம் செய்ய வேண்டும் என பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாமில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அரங்கில் ஆயத்த ஆடைத் தொழிலில் பணிபுரியும் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம், நீதிபதி சிவராஜ் வி. பாட்டில் நிறுவன மேலாண்மை அறங்காவலர் வழக்கறிஞர் செல்வ கோமதி தலைமையில் நடைபெற்றது.

இதில் போக்குவரத்துக் கழகப் பணியாளர் சம்மேளன மாநிலத் துணைத் தலைவர் சம்பத் பேசியதாவது:

முறைசாரா, முறைசார்ந்த தொழிலாளர்களின் உரிமைகள் ஒன்றிணைந்த போராட்டங்களால் வென்றெடுக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக தொழிலாளர் விரோத போக்குக்கு எதிராகக் குரல் கொடுப்பதுடன், அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். முறைசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்கள், அவரவர் வாரியங்கள் மூலமாக பெற தொழிற்சங்கங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன என்றார்.

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கருணாநிதி பேசுகையில், தொழிலாளர்கள் ஒன்றிணைந்து போராடுவதற்கு அரசியலமைப்பு சட்டம் உரிமை வழங்கி உள்ளது. ஆயத்த ஆடை தயாரிப்பில் பெண்கள் அதிகளவில் பணிபுரிகின்றனர். அவர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் போது அரசு சாரா அமைப்புகளின் பொறுப்பாளர்களின் உதவியை நாடலாம் என்றார்.

இதில், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும், கிராமப்புற பெண்களுக்கு வழங்கப்படும் முதியோர் ஓய்வூதியத்தை ரூ.5 ஆயிரமாக உயர்த்த வேண்டும், ஜவுளிக் கடைகளில் பணிபுரியும் பெண்களுக்கு அமர்வதற்கான உரிமை வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாலதி நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT