பர்கூர் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில், ஓட்டுநர் உட்பட 6 பேர் காயமடைந்தனர்.
சென்னையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக விரைவுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை, மேல்மலையனூரைச் சேர்ந்த ஓட்டுநர் ஜெயராமன் (46) ஓட்டினார். திருவண்ணாமலையைச் சேர்ந்த நடத்துநர் ஜான் முகமது (43) பணியில் இருந்தார். பேருந்தில் 36 பயணிகள் இருந்தனர்.
பேருந்து நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த பி.ஆர்.ஜி மாதேப்பள்ளி பகுதியில் வந்தபோது எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரி மீது மோதி, சாலை சென்டர் மீடியனில் மோதியது.
இதில், பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பயணிகள் செங்கல்பட்டைச் சேர்ந்த வேலு (39), நந்தன் (28), ரங்கராஜ் (45), சித்தூர் கிருஷ்ணப்பா (52) ஆகிய 6 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக கந்தி குப்பம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.