Regional03

கிருஷ்ணகிரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பை பலப்படுத்த திமுக கோரிக்கை :

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரியில் வைக்கப் பட்டுள்ள வாக்குப்பதிவு இயந் திரங்கள் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும் என கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெயசந்திர பானு ரெட்டிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 6-ம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளின் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பை மேலும் பலப்படுத்த, 24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் வரும் அரசு, தனியார் மற்றும் இருசக்கர வாகனங்களை நுழைவாயில் அருகில் உள்ள மைதானத்திற்குள் மட்டுமே நிறுத்த அனுமதிக்க வேண்டும். வேறு எந்த பகுதியிலும் இயக்க அனுமதிக்கக்கூடாது.

பிஎச்இஎல் நிறுவனத்தைச் சேர்ந்த பொறியாளர்களையோ, நிறுவனத்தைச் சேர்ந்த பிற அலுவலர்களையோ அனுமதிக்கக் கூடாது. கண்காணிப்பு கேமரா 24 மணி நேரமும் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். குப்பம் சாலை, சென்னை தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள வைபை இணைப்புகளை துண்டிக்க வேண்டும். 24 மணி நேரமும் தங்குதடையின்றி மின்சாரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கிருஷ்ணகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்கு எண்ணும் மையத்தில் ஒரே அறையில் 14 மேசைகளையும் அமைக்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் வெளிப்புற இடது பக்கத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்படவில்லை. அங்கு 2 கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பினை மேலும் பலப்படுத்த வேண்டும்.

SCROLL FOR NEXT