Regional02

ஆவடியில் ரயில்வே மேம்பால விரிவாக்கம் - அரசு அறிவித்து 3 ஆண்டு ஆகியும் பணி தொடங்கவில்லை : உடனடியாக தொடங்க மக்கள் கோரிக்கை

செய்திப்பிரிவு

ஆவடி ராணுவ சாலையில் உள்ள குறுகிய ரயில்வே மேம்பாலம் விரிவாக்கம் செய்யப்படும் எனதமிழக அரசு அறிவித்து 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அதற்கான எவ்வித பணியும் தொடங்கப்படவில்லை. எனவே, விரிவாக்கப்பணியை தொடங்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் புதிய ராணுவ சாலை உள்ளது. இச்சாலை அம்பத்தூர், பட்டாபிராம், ஆவடி வழியாக செல்லும் சென்னை-திருப்பதி சாலையை இணைக்கும் முக்கியசாலையாகும். தினமும் இச்சாலையை ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன. இதனால், இச்சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து காணப்படும்.

அத்துடன், சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையை இணைக்கும் பகுதியில், புதிய ராணுவ சாலையில் குறுகிய ரயில்வே மேம்பாலம் உள்ளது. இதனால், இப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றன. எனவே, இந்த ரயில்வே மேம்பாலத்தை விரிவாக்கம் செய்ய கோரிக்கை எழுந்தது.

இதைத் தொடர்ந்து, ரூ.11.3 கோடி செலவில் இப்பாலம் விரிவாக்கம் செய்யப்படும் என தமிழகஅரசு கடந்த 2018-ம் ஆண்டு ஜூன்மாதம் சட்டப்பேரவையில் அறிவித்தது. ஆனால், 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை இதற்கான பணிகள் ஏதும் தொடங்கப்படவில்லை.

அப்பகுதியில் தினமும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, இனியும் தாமதிக்காமல் இந்தப் பாலத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT