சேலம் மாநகராட்சி சங்கர் நகர் பகுதியில் நடைபெற்ற கரோனா தொற்று கண்டறியும் முகாமை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார். 
Regional01

22 மருத்துவக் குழுக்கள் மூலம் - தினசரி 40 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் : சேலம் மாநகராட்சி ஆணையர் தகவல்

செய்திப்பிரிவு

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய 22 மருத்துவக் குழுக்கள் மூலம் தினசரி 40 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்திலும் கரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மாவட்டத்தின் பிற இடங்களை விட சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் மக்கள் அடர்த்தி அதிகம் என்பதால் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இந்நிலையில், சேலம் மாநகராட்சிக்கு உட்பட் பகுதிகளில் கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தினம்தோறும் 200 வீடுகளுக்கு மாநகராட்சியின் 360 களப்பணியாளர்கள் நேரடியாக சென்று, அப்பகுதியில் குடியிருப்போர் அனைவரின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கூறியதாவது:

மாநகராட்சி களப்பணியாளர் கள், வீடு வீடாகக் சென்று நடத்தும் பரிசோதனைகளில், சளி மற்றும் காய்ச்சல் போன்ற கரோனா தொற்று அறிகுறி உள்ளவர்களைக் கண்டறிந்து, அவர்களை அருகில் உள்ள சளி பரிசோதனை மையத்துக்கு அனுப்பி, கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனைக்கு உட்படுத்துகின்றனர்.

தற்போது, மாநகராட்சிப் பகுதிகளில் தினந்தோறும் 40 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களும், 8 இடங்களில் சிறப்பு சளி தடவல் பரிசோதனை முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஜனவரி முதல் நாளில் இருந்து இதுவரை 52,153 சளி தடவல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 315 பேர் கரோனாவால் பாதிக்கப் பட்டிருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தேவையான சிகிச்சை வழங்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் மாநகராட்சிப் பகுதியில் 22 மருத்துவக் குழுக்கள் மூலம் 40 இடங்களில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் 1,991 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1,448 பேருக்கு சளி தடவல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

கரோனா தொற்று கண்டறிய வீடுகள் தோறும் வரும் களப்பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT