ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (43). இவர் ஈரோடு கொங்காலம்மன் கோயில் வீதியில் பிளாஸ்டிக் மற்றும் பேன்சி கடை வைத்துள்ளார். இவர் கடையில் கடந்த 15-ம் தேதி ரூ.3 லட்சத்தை பையில் வைத்திருந்தார். அப்போது கடைக்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் முகக்கவசம் அணிந்து பொருட்களை தேர்வு செய்து கொண்டிருந்தார்.
பின்னர், திடீரென அந்தப் பெண் வேகமாக கடையை விட்டு சென்று விட்டார். சிறிது நேரத்தில் பிரகாஷ் பணம் வைத்திருந்த டேபிளை பார்த்தார். அதில் பணம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டார். அதில் சம்பந்தப்பட்ட பெண் பணப்பையை தனது பையில் எடுத்து வைத்துக் கொண்டு வேகமாக சென்றது பதிவாகியிருந்தது. இதுகுறித்து பிரகாஷ் ஈரோடு டவுன் போலீஸில் புகார் செய்தார். புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.