கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா பரவாமல் தடுக்க பொதுமக்கள் முழு அளவில் ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம், ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:
மாவட்டத்தில் கரோனா தொற்று முழு அளவில் கட்டுக்குள் கொண்டு வர அனைத்துத் துறை அலுவலர்களும் பணியாற்ற வேண்டும். பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே வர வேண்டும்.
அவசியம் ஏற்பட்டால் தவிர தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். கடைகள், வணிக நிறுவனங்களுக்குள் பொதுமக்களை அனுமதிக்கும் போது கட்டாயம் உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும். கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இருமல், காய்ச்சல், சளி பிரச்சினை உள்ளவர்களை அனுமதிக்கக் கூடாது. பேருந்துகளில் அரசு விதிமுறைகளின்படி பயணிகளை ஏற்ற வேண்டும். மாவட்டத்தில் கரோனா பரவாமல் தடுக்க மக்கள் முழு அளவில் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெரியசாமி மற்றும் அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.