சங்கரன்கோவில் அருகேயுள்ள நடிகர் விவேக்கின் சொந்த ஊரான பெருங்கோட்டூர் கிராம மக்கள் அவரது உருவப்படத்தை அலங்கரித்து வைத்து மலரஞ்சலி செலுத்தினர். 
Regional02

நடிகர் விவேக்கின் சொந்த ஊரில் சோகத்தில் மூழ்கிய மக்கள் :

செய்திப்பிரிவு

நடிகர் விவேக் மறைவு செய்தியை அறிந்ததும் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள அவரது சொந்த ஊரான பெருங்கோட்டூர் கிராம மக்கள் சோகம் அடைந்தனர்.

சங்கரன்கோவிலில் இருந்து 7 கி.மீ. தொலைவில் பெருங் கோட்டூர்கிராமம் உள்ளது. திருநெல்வேலிகாரர் என்று விவேக்கை சொல்வார்கள். ஆனால் திருநல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி தனி மாவட்டமாக பிரிக்கப் பட்டதையடுத்து தற்போது சங்கரன்கோவில் இம்மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளது.

விவேக்கின் மரணம் குறித்து தெரியவந்ததும் பெருங்கோட்டூர் கிராமம் சோகத்தில் மூழ்கியது. அங்குள்ளவர்கள் விவேக்கின் உருவப்படத்தை வைத்து மலரஞ்சலி செலுத்தினர். இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அவருக்கு நெருக்கமான உறவினர்கள் 30 பேர் வேன் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையிலுள்ள மேரிசார்ஜென்ட் பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலும், கதீட்ரல் மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலும் விவேக் படித்துள்ளார். இதற்காகபாளையங்கோட்டை முருகன்குறிச்சியிலுள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.

நண்பர்கள் அஞ்சலி

கோவில்பட்டி

அரசு மருத்துவமனை இயற்கைவாழ்வியல் மருத்துவர் திருமுருகன், ஜீவ அனுகிரகா பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன், தமாகா நகரத் தலைவர் ராஜகோபால், மருத்துவர் ராமையா, சமூக ஆர்வலர் முருகன் உள்ளிட்டோர் மெழுகுவத்தி ஏற்றி, நடிகர் விவேக் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற விவேக்கின் தந்தை அங்கையா தனது கடைசிக் காலத்தில் கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி தாமஸ் நகரில் வசித்து வந்தார். இவர்களது குல தெய்வமான அலங்காரி அம்மன், கருப்பசாமி கோயில் கோவில்பட்டி அருகே குருமலையில் உள்ளது.

கோவில்பட்டி பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் மற்றும் படப்பிடிப்பில் பங்கேற்க வருகை தரும்போது நடிகர் விவேக் குருமலையில் உள்ள குலதெய்வக் கோயிலுக்கு செல்வது வழக்கம். இக்கோயிலுக்கு அவர் ஏராளமான திருப்பணிகளையும் செய்து கொடுத்துள்ளார்.

தூத்துக்குடி

SCROLL FOR NEXT