புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே திருவேங்கைவாசலில் போத்து முறையில் வளர்க்கப்பட்ட மரத்தைப் பார்வையிட்டதுடன், பராமரிப்பு பணியில் ஈடுபட்ட பணியாளர்களை பாராட்டிய நடிகர் விவேக். உடன் அப்போதைய ஆட்சியர் சு.கணேஷ் உள்ளிட்டோர்.(கோப்பு படம்) 
Regional02

‘போத்து’ முறை மரம் வளர்ப்பை பாராட்டிய நடிகர் விவேக் நினைவாக - மரக்கன்றுகள் நட்டு இளைஞர்கள் அஞ்சலி :

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் மரபோத்து எனும் புதிய முறையில் மரம் வளர்க்கப்படுவதை பாராட்டிய நடிகர் விவேக் நினைவாக குளக்கரையில் மரக்கன்றுகள் நட்டு இளைஞர்கள் அஞ்சலி செலுத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பொது இடங்களில் நடப்படும் மரக்கன்றுகளை கால்நடைகள் மேய்ந்துவிடுவதால், அதைத் தவிர்ப்பதற்காக 3 ஆண்டுகளுக்கு முன்பு அதிக எண்ணிக்கையில் போத்துகள்(மரக் கிளைகள்) நடப்பட்டன. அப்போது இங்கு ஆட்சியராக இருந்து சு.கணேஷ் (தற்போது இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர்) உத்தரவின் பேரில் போத்து முறையில் மரம் வளர்ப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

அதாவது, ஆல், அரசு, பூவரசு போன்ற மரங்களில் இருந்து வெட்டி ஊன்றப்படும் போத்துகளும் நன்கு வளரக்கூடியது என்பதால் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நீர்நிலைகளின் கரையோரம், சாலையோரங்களில் லட்சக்கணக்கில் போத்துகள் ஊன்றப்பட்டு, சுற்றிலும் முள் வேலி அமைக்கப்பட்டு, தண்ணீர் ஊற்றி பராமரிக்கப்பட்டு வந்தன.

இதையறிந்த நடிகர் விவேக், கடந்த 2018 மார்ச் 18-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவேங்கைவாசல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் போத்துகள் மூலம் மரம் வளர்ப்பு பணியை பார்வையிட்டு ஆட்சியரையும், பணியாளர்களையும் வெகுவாக பாராட்டினார்.

மரம் வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டிய நடிகர் விவேக் திடீரென மறைந்த தகவலறிந்த திருவேங்கைவாசல் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தில் உள்ள பெரிய குளத்தின் கரையோ ரங்களில் அப்பகுதி இளைஞர்கள், நடிகர் விவேக் நினைவாக நேற்று மரக்கன்றுகளை நட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல, பெரம்பலூர் மாவட் டம் நாட்டார்மங்கலம் கிராமத்தில் நம்மால் முடியும் இளைஞர்கள் இயக்கத்தினர் நேற்று 20-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு நடிகர் விவேக்குக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும், பெரம்பலூர், துறைமங்கலம், இரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவரது ரசிகர்கள் விவேக் நினைவாக மரக்கன்றுகள் நட்டனர்.

இதேபோல, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் இளை ஞர்களும், நாகை இஜிஎஸ் பிள்ளை கல்லூரியில் மாணவ, மாணவிகளும், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் என்எஸ்எஸ் மாணவர்களும் நேற்று மரக்கன்றுகளை நட்டு, நடிகர் விவேக் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

SCROLL FOR NEXT