பந்தயக் குதிரைக்கு தொடர் வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து, ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில், குதிரையின் வயிற்றில் இருந்த குடற்கல் (பிளாஸ்டிக் பொருட்கள் அடங்கிய கழிவு) அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் திரு விடைமருதூரைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர், தனது 6 வயது பந்தய ஆண் குதிரை உடல்நலக்குறைவாக உள்ளதாக, ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த ஏப்.8-ம் தேதி சிகிச்சைக்காக அழைத்து வந்தார்.
மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், பந்தயக் குதிரையின் வயிற்றில் குடல் அடைப்பை ஏற்படுத்தும் குடற்கல் இருப்பதும், அதனால் தொடர் வயிற்று வலி இருப்பதும் கண்டறியப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் குடற்கல்லை அகற்ற முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கல்லூரி முதல்வர் தி.சிவகுமார் வழிகாட்டுதலின்படி மருத்துவர்கள் ச.செந்தில்குமார், அ.குமரேசன், ப.தமிழ்மகன் அடங் கிய அறுவை சிகிச்சைக் குழுவினர், குடல் அடைப்பு ஏற்படுத்திய 5 இன்ச் நீளமுள்ள 300 கிராம் எடையுடைய குடற்கல்லை கடந்த 10-ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றினர். தொடர் கண்காணிப்பு மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டதில், தற்போது குதிரை பூரண குண மடைந்துள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல் வர் தி.சிவகுமார் கூறியது: குதிரைகளில் குடல் அறுவை சிகிச்சை மிகவும் சிக்கல் மற்றும் சவால்கள் நிறைந்தது. இத்தகைய பாதிப்புகளைத் தவிர்க்க குதிரை வளர்ப்போர் குதிரைகள் உட்கொள்ளும் உணவு பொருட் களில் பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம். குதிரை தவறுதலாக உட்கொண்ட பிளாஸ்டிக்கால் ஏற்பட்ட குடற்கல், முழு மயக்க நிலையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இங்கு இதுபோன்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது முதல்முறை என்று தெரிவித்தார்.