Regional03

தூத்துக்குடி சிவன் கோயிலில் - சித்திரை திருவிழா கொடியேற்றம் :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை  சங்கர ராமேசுவரர் கோயில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் யாரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

கொடி மரம் முன்பு சுவாமி சங்கர ராமேசுவரர், அம்பாள் பாகம்பிரியாள் எழுந்தருள, கலச கும்பங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன.

கரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்கள் கோயிலுக்குள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தினமும் காலை மற்றும் மாலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் மற்றும் மாடவீதிகளில் பல்வேறு சப்பரங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

விழாவின் 10-ம் நாள் நடை பெறும் தேரோட்டம் இந்தாண்டு ரத்து செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக கோயில் வளாகத்தில் சப்பர பவனி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொடியேற்ற நிகழ்ச்சியில், கோயில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, தக்கார் சிவகளை பிரியா, சங்கர் பட்டர், சண்முக சுந்தரம் பட்டர், சுப்பிரமணியன் பட்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT