வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது.‌ இதில், கலந்து கொள்பவர்களுக்கு கரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என்பதால் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள நேற்று சமூக இடைவெளியின்றி குவிந்த தேர்வாளர்கள். படம்: வி.எம்.மணிநாதன். 
Regional01

இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்காக - கரோனா சான்றிதழ் பெறுவதற்காக முண்டியடித்த இளைஞர்கள் :

செய்திப்பிரிவு

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காவலர் தேர்வில் பங்கேற்பதற்காக கரோனா சான்றிதழ் பெற இளைஞர்கள் ஒன்று திரண்டு முண்டியடித்துக் கொண்டு நின்றதால் சலசலப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு முடிவு வெளியாகி சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வுகள் வரும் 21-ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில் தேர்வு முகாமில் பங்கேற்க உள்ளவர்கள் 7 நாட்களுக்குள் பெறப்பட்ட கரோனா தொற்று இல்லை என்ற சான்றை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் வரும் 21-ம் தேதி தொடங்கவுள்ள தேர்வில் 1,753 பேர் பங்கேற்க இருந்தனர். அதேபோல், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்திலும் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கரோனா சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதையடுத்து, சுமார் 200-க்கும்மேற்பட்டோர் வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று காலை திரண்டனர். முதலில் வரிசையாக நின்றவர்கள் நேரம் கடந்ததும் முண்டியடித்துக் கொண்டு செல்ல முயன்றனர். சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நின்றதால் ஊழியர்கள் திணறினர்.

இதற்கிடையில், கரோனா இரண்டாம் அலை அச்சத்தால் இரண்டாம் நிலை காவலர் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக வெளியான தகவல் தேர்வில் பங்கேற்க உள்ளவர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT