கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரியில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது.
கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெனுகொண்டாபுரத்தில் அதிகபட்சம் 27, ஓசூர் 22, பாரூர் 11.6, அஞ்செட்டி 9.4, தேன்கனிக்கோட்டை 9 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதேபோல் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் 8, ஒகேனக்கல் 10 மில்லிமீட்டர் பதிவாகி இருந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக பெய்த மழையால், ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று நீர்வரத்து விநாடிக்கு 88 கனஅடியாக இருந்தது. அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில், 31.82 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 88 கனஅடி தண்ணீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதேபோல், கிருஷ்ணகிரி அணையை பொறுத்தவரை மார்ச் 1-ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 44 நாட்களாக நீர்வரத்து முற்றிலும் நின்றது. இதனால் தென்பெண்ணை ஆற்றிலும் நீரின்றி வறண்டு காட்சியளித்தது. அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறையத் தொடங்கியது. மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக பெய்த மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 12 அடியாக உள்ளது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் 39.30 அடிக்கு தண்ணீர் உள்ளது.