Regional01

வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு :

செய்திப்பிரிவு

ரயில் விபத்தில் காயமடைந்தவருக்கு இழப்பீடு வழங்க காலதாமதப்படுத்தியதால் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை ஜப்தி செய்ய திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சையைச் சேர்ந்தவர் பழனி. கூலித் தொழிலாளியான இவர் கடந்த 2003-ம் ஆண்டு சென்னையிலிருந்து அரியலுாருக்கு பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். விக்கிரவாண்டி அருகே ஆளில்லா ரயில்வே கேட்டில் டிராக்டர் மீது ரயில் மோதியது.

இந்த விபத்தில் ரயிலில் பயணம் செய்த பழனிக்கு படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு விழுப்புரம், புதுச்சேரி மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவரால் எழுந்து நிற்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, தனக்கு இழப்பீடு வழங்கக்கோரி திருச்சி மூன்றாவது கூடுதல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அங்கு தனக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்காததால் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் பழனிக்கு ரூ.2.23 லட்சத்தை வட்டியுடன் வழங்க ரயில்வே நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த 2017-ம் ஆண்டு உத்தரவிட்டது. மேலும் இந்த பணத்தை திருச்சி மூன்றாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் கட்டவும் உத்தரவிடப்பட்டது. ஆனால் ரயில்வே நிர்வாகம் அந்த பணத்தை முழுமையாக கட்டாமல் சுமார் ரூ.80 ஆயிரம் ரூபாய் பாக்கி வைத்திருந்தது. அதை செலுத்துமாறு ரயில்வே நிர்வாகத்துக்கு நீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியும் எவ்வித பலனுமில்லை.

இதையடுத்து இழப்பீட்டு தொகையை வழங்காத ரயில்வே நிர்வாகத்தை எதிர்த்து, பழனி சார்பில் அவரது வழக்கறிஞர் செந்தில்குமார் திருச்சி மூன்றாவது கூடுதல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் மீதான விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது, நிலுவைத் தொகையை வசூலிக்க வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை ஜப்தி செய்யுமாறு நீதிபதி விவேகானந்தன் உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT