மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி தர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம்(என்ஐடி) முதலிடம் பெற்றுள்ளது.
இதுகுறித்து திருச்சி என்ஐடி இயக்குநர் மினிஷாஜி தாமஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி தர மேம்பாட்டுத் திட்டத் தின் கீழ் பெங்களுரூ இந்திய அறிவியல் நிறுவனத்தின் பேராசிரி யர் என்.சி.சிவப்பிரகாஷ், திருச்சி என்ஐடியில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டார். அவர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் திருச்சி என்ஐடிக்கு 3-க்கு 1.03 தணிக்கை மதிப்பெண் கிடைத் துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள என்ஐடிக்கள் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களில் இது முதலாவது இடமாகும்.
தொழில்நுட்ப கல்வி தர மேம்பாட்டுத் திட்டத்தின் 3-வது கட்டம் 2018-2021-ம் ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் நோக்கம் பொறியி யல் கல்வியில் அதன் தரத்தை மேம்படுத்துவதாகும். மேலும், குறைந்த வருவாய் மாநிலங்கள் மற்றும் சிறப்புப் பிரிவு மாநிலங்கள் ஆகியவற்றில் உள்ள சில தொழில் நுட்ப பல்கலைக்கழகங்களில் அதன் கொள்கை, கல்வி மற்றும் மேலாண்மை நடைமுறைகளை மேம்படுத்துவதாகும்.
தொழில்நுட்ப கல்வி தர மேம்பாட்டுத் திட்டத்தின் 1 மற்றும் 2-வது கட்டங்களின் ஆய்வில் திருச்சி என்ஐடி முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது 3-வது கட்டத்திலும் தேர்வு செய்யப்பட்டதால் ரூ.7.7 கோடி நிதி கிடைக்கும். மேலும், அந்தமான் நிகோபர் தீவுகளில் உள்ள டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தொழில்நுட்பக் கழகத்துக்கு வழிகாட்டல் நிறுவனமாகவும் செயல்படும்.
தொழில்நுட்ப கல்வி தர மேம்பாட்டுத் திட்டத்தின் 3-வது கட்டத்தில் முதலிடம் பெற்றுள்ள திருச்சி என்ஐடியின் குழுவுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.