திருச்சி மேலப்புதூர் பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று பிளஸ் 2 செய்முறை தேர்வு எழுதிய மாணவிகள்.படம்: ஜி.ஞானவேல்முருகன் 
Regional01

பிளஸ் 2 மாணவர்களுக்கு - செய்முறைத் தேர்வு தொடக்கம் : இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது

செய்திப்பிரிவு

பிளஸ் 2 வகுப்பில் அனைத்துப் பிரிவிலும் உள்ள 28 பாடங்களுக்கான செய்முறை தேர்வுகள் ஏப்.16 முதல் ஏப்.20 வரை மற்றும் ஏப்.20 முதல் ஏப்.23 வரை என 2 கட்டங்களாக நடத்தப்படவுள்ளன. இதன்படி, திருச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் நேற்று தொடங்கின. அந்தந்த பள்ளிகளில் உள்ள பாடப் பிரிவுகளுக்கேற்ப செய்முறை தேர்வுகள் நடத்தப்பட்டன.

திருச்சி மாவட்டத்தில் முதல் கட்டமாக 124 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், 90 மையங்களில் நேற்று செய்முறை தேர்வெழுதினர். மாணவ, மாணவிகள் 11,373 பேரில் 11,056 பேர் செய்முறை தேர்வில் பங்கேற்றனர். 317 பேர் பங்கேற்கவில்லை.

கல்வி மாவட்டம் வாரியாக திருச்சியில் 4,254 பேரில் 4,137 பேரும், லால்குடியில் 2,823 பேரில் 2,784 பேரும், மணப்பாறையில் 2,546 பேரில் 2,433 பேரும், முசிறியில் 1,750 பேரில் 1,702 பேரும் செய்முறைத் தேர்வில் பங்கேற்றனர்.

இதேபோல, புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ் 2 பயிலும் 9,095 தமிழ் வழி மாணவர்கள், 3,923 ஆங்கில வழி மாணவர்கள் என மொத்தம் 13,018 மாணவர்கள் செய்முறைத் தேர்வை எழுதுகின்றனர்.

புத்தாம்பூர், புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட தேர்வு மையங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் என 74 பள்ளிகளில் பயிலும் 7,293 மாணவ, மாணவிகளுக்கான செய்முறைத் தேர்வுகள் நேற்று 56 மையங்களில் நடைபெற்றன.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதல் சுற்றில் இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுகளிலும், தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தாவரவியல், விலங்கியல், உயிரியல், கணிணி அறிவியல் பாடப் பிரிவுகளுக்கான செய்முறை தேர்வுகளும் நடைபெற்றன.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நேற்று 104 தேர்வு மையங்களில் 12,541 மாணவ, மாணவிகள் நேற்று செயல்முறை தேர்வு எழுதினர்.

தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகள் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற உடற்கல்வி ஆசிரியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

காரைக்கால் மாவட்டத்தில் 17 மையங்களில் நேற்று நடைபெற்ற பிளஸ் 2 செய்முறைத் தேர்வில் சுமார் 2,000 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். காரைக்கால் கோயில்பத்து தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளி, அன்னை தெரசா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில் நடைபெற்ற செய்முறைத் தேர்வை மாவட்ட மேல்நிலைக் கல்வி துணை இயக்குநர் கே.கோவிந்தராஜ், முதன்மைக் கல்வி அதிகாரி ஏ.அல்லி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

SCROLL FOR NEXT