தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதலில் தடுப்பூசி போடுவதற்கு பலரும் தயக்கம் காட்டினர். கடந்த சில நாட்களாக கரோனா தொற்றின் 2-ம் அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக மக்கள் மத்தியில் கரோனா தடுப்பூசி போடும் ஆர்வம் அதிகரித்துள்ளது. தடுப்பூசி மையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
கோவாக்சின் தட்டுப்பாடு
இந்நிலையில் தூத்துக்குடியில் கோவாக்சின் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. புதிதாக தடுப்பூசி போட வருவோர் அனைவருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே போடப்படுகிறது. அதேநேரத்தில் 2-வது டோஸ் கோவாக்சின் தடுப்பூசி போட வருபவர்களுக்கு மட்டும் கோவாக்சின் தடுப்பூசி போடப்படுகிறது.
ஆனால், பெரும்பாலானவர்கள் தங்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி தான் போட வேண்டும் என கூறுவதால், அவர்களுக்கு தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பலர் திரும்பி சென்றுவிடுவதாக கூறப் படுகிறது.
அரசு உடனடியாக தலையிட்டு, தேவையான கோவாக்சின் தடுப்பூசியை தூத்துக்குடிக்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எம்பவர் இந்தியா அமைப்பின் செயல் இயக்குநர் ஆ.சங்கர், தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், `தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசியை போதிய அளவில் இருப்பு வைக்க உத்தர விட வேண்டும்.
மேலும் இருதய நோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற துணை நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 45 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் பணம் செலுத்தி தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடுவதற்கு உரிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட ஆவன செய்ய வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது கோவாக்சின் தடுப்பூசி இருப்பு இல்லாததால் புதிதாக வருவோருக்கு அத்தடுப்பூசி போடப்படுவதில்லை. 2-வது தவணை போடவருவோருக்கு மட்டுமே கோவாக்சின் போடப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊழியர்கள் 10 பேருக்கு தடுப்பூசி போடுவதற்காக ஏற்கெனவே பதிவு செய்திருந்த 10 பேரை தடுப்பூசி மையத்திலிருந்தவர்கள் நிராகரித்தனர். இதனால் ஆத்திரமடைந்த திருநெல்வேலி டவுனை சேர்ந்த சிதம்பரவள்ளி என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தடுப்பூசிபோடும் பணி சிறிதுநேரம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து அங்குவந்த சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் வரதராஜன் உள்ளிட்ட அதிகாரிகள், ஏற்கெனவே பதிவு செய்துள்ள 30 பேருக்கும் தடுப்பூசி போடுவதற்கு அறிவுறுத்தியதுடன், ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 10 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு தனியாக 10 டோஸ் தடுப்பூசி மருந்து அனுப்பவும் நடவடிக்கை எடுத்தனர். இந்த மையத்தில் நேற்று முன்தினம் 60 பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில் நேற்று பாதியளவே தடுப்பூசி போடப்பட்டது.
கன்னியாகுமரி
ஆனால், கோவிட் தடுப்பூசி போதிய அளவு கையிருப்பு இல்லாததால் பாதிக்கும் மேற்பட்டோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.