விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பாதிக்க எதிர்ப்பு தெரிவித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாய நிலத்தின் வழியாக எரிவாயு குழாய் கொண்டு செல் வதை கண்டித்து, கெயில் எரிவாயுக் குழாய் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இயக்கம் மற்றும் பாரத் பெட்ரோலியத்தின் எண்ணெய்க்குழாய் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இயக்கம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே காத்திருப்பு போராட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் திருப்பூர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி தலைமை வகித்தார்.
காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டியிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது:
கேரள மாநிலம், கொச்சியி லிருந்து தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் வழியாக எரிவாயு குழாய் பதித்து, கர்நாடக மாநிலத்திற்கு எரிவாயு, எண்ணெய் எடுத்துச் செல்வதற்கு கடந்த 2011-ம் ஆண்டு முதல் கெயில் நிறுவனம் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது. எரிவாயு குழாய் திட்டம் சாலையோரம் மட்டுமே நிறைவேற்றப்படும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே விவசாயிகளை, அச்சுறுத்தி கெயில் நிறுவனம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும். கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இத்திட்டம் சாலையோரம் மட்டுமே அமைக்கப்படுவது போல், தமிழகத்திலும் சாலையின் ஓரத்தில் கெயில் எரிவாயுக் குழாய் மற்றும் பாரத் பெட்ரோலிய எண்ணெய் குழாய் திட்ட குழாய்களை பதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
மனுவை பெற்ற ஆட்சியர் கூறியதாவது: வருகிற மே 2-ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. அதனைத் தொடர்ந்து ஒரு கூட்டத்தைக் கூட்டி இதுதொடர்பாக முடிவெடுக்கலாம். அதுவரை குழாய் பதிக்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். இதனால் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஏடிஎஸ்பி ராஜி, டிஎஸ்பி சரவணன் ஆகியோர் தலைமையில் உட்பட 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.