கரோனா தொற்றின் 2-வது அலைவேகமாக அதிகரித்து வருவதை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. மக்கள் மத்தியிலும் தடுப்பூசி போடும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் தடுப்பூசி மையங்களில் 45 வயதுக்கு மேற்பட்ட மக்கள் குவிந்து வருகின்றனர்.
இந்தியாவில் கரோனா தடுப்பூசிபோடும் பணி கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், அரசு அலுவலர்கள், காவல் துறையினர், பத்திரிகையாளர்களுக்கும், தொடர்ந்து மார்ச் 1-ம் தேதி முதல் 2-வது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் 45 வயதுக்கு மேல் 59 வயதுக்குள் இருக்கும் இணை நோய்கள் கொண்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. அடுத்தகட்டமாக ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.
முதலில் தடுப்பூசி போடுவதற்கு பெரும்பாலானோர் முன்வரவில்லை. பலரும் தயக்கம் காட்டினர். தடுப்பூசி மையங்களில் கூட்டம்இல்லாமல் இருந்தது.
கடந்த சில நாட்களாக கரோனா தொற்றின் 2-ம் அலை மிக வேகமாக பரவிவருகிறது. இதனை தடுக்க அனைவரும் தடுப்பூசி போடுவது ஒன்றே தீர்வாக அமையும் என மத்திய, மாநில அரசுகள் கூறியுள்ளன. மேலும், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக, மக்கள்மத்தியில் கரோனா தடுப்பூசிபோடும் எண்ணம் அதிகரித்துள்ளது. பலரும் கரோனா தடுப்பூசிமையங்களை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். அவற்றில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்தவாரம் வரை, ஒரு நாளைக்கு சராசரியாக 50 பேர் மட்டுமே கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். கடந்த ஒரு வாரமாக தினமும் சராசரியாக 400 பேருக்கு இங்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதேபோல், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மூன்று நகர்நல மையங்களிலும் தினசரி சராசரியாக 50 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
மேலும், தனியார் தொழிற்சாலைகள், நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்காக தடுப்பூசி முகாம்களை நடத்த ஆர்வம் காட்டி வருகின்றன. தூத்துக்குடி சிப்காட் தொழிற்பேட்டை, துறைமுகம், என்டிபிஎல் போன்ற பல்வேறு தனியார் நிறுவனங்களில் தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மேலும் சில தனியார் நிறுவனங்களும் தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டுகோள் விடுத்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.