Regional01

உயிரிழப்பில் சந்தேகம் - புதைக்கப்பட்ட பெண் சிசுவின் உடலை மீட்டு விசாரணை :

செய்திப்பிரிவு

நாமக்கல் அருகே உயிரிழப்பில் ஏற்பட்ட சந்தேகத்தை தொடர்ந்து புதைக்கப்பட்ட பெண் சிசுவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனை செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி சிவன்கோயில் தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சூர்யா. இவரது மனைவி கஸ்தூரி (27). இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கஸ்தூரிக்கு கடந்த 5-ம் தேதி நாமக்கல் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.

இதற்கிடையில், அவர் மருத்துவமனையில் முறையாக டிஸ்சார்ஜ் ஆகாமல் குழந்தையை எடுத்துக் கொண்டு பொட்டிரெட்டிப்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டுக்குச் சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் குழந்தை திடீரென இறந்துள்ளது. இதையடுத்து, குழந்தையின் உடல் அங்குள்ள மயானத்தில் அடக்கம் செய்தனர்.

தகவல் அறிந்த எருமப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் லதா, கஸ்தூரியின் பெற்றோர் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், குழந்தை உயிரிழப்பில் சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக லதா எருமப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

நேற்று சேந்தமங்கலம் வட்டாட்டசியர் சுரேஷ் முன்னிலையில் காவல் துறையினர் பாதுகாப்புடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தையின் உடலை மீட்டு அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர். தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT