திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டையை சேர்ந்தவர் என்.அப்துல்காதர்(89). இவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர், மாநில துணைத்தலைவர், திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். அக்கட்சி சார்பில் எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளார்.
1977-ம் ஆண்டு மதுரை வந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடும் தாக்குதலுக்கு உள்ளானபோது அவரை காப்பாற்ற அரணாக இருந்தார். அப்போது அப்துல்காதர் தாக்குதலுக்குள்ளாகி தனது ஒரு கண்ணை இழந்தார். வயது மூப்பின் காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார். உடல்நலக் குறைவால் நேற்று மாலை காலமானார். இன்று மாலை 4 மணிக்கு சித்தையன்கோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி சடங்குகள் நடைபெறவுள்ளன.