Regional01

வெடி வைத்து பள்ளம் தோண்ட விவசாயிகள் எதிர்ப்பு : சேலம் அருகே அதிகாரிகள் தலையிட்டு தீர்வு

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டம் தேவூர் அருகே விவசாய பணிக்கு குழாய் பதிக்க வெடி வைத்து பள்ளம் தோண்ட எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் தேவூர் அடுத்த புள்ளாகவுண்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சீரங்க கவுண்டம்பாளையம் பகுதியில் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தனிநபர்கள் 7 பேர் காவிரி ஆற்றிலிருந்து விவசாயத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக அரசு அனுமதி பெற்று இப்பணி கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் நடந்தது.

இதற்கு, அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து ஏற்கெனவே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். அதன் பின்னர் போலீஸார் பாதுகாப்புடன் பணிகள் தொடர்ந்தன.

இந்நிலையில், குழாய் பதிக்க அனுமதி பெற்ற பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் நேற்று ஜேசிபி வாகனம் மூலம் குழாய் அமைக்கும் பணி நடந்தது. அப்போது, வெடி வைத்து பள்ளம் தோண்டப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி விவாசாயிகள் ஜேசிபி வாகனத்தை சிறை பிடித்தனர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற சங்ககிரி துணை வட்டாட்சியர் ஜெயக்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் மலர் (அக்ரஹாரம்), அருள்முருகன் (புள்ளாக்கவுண்டம்பட்டி) மற்றும் தேவூர் இன்ஸ்பெக்டர் அர்ஜுனன் தலைமையிலான போலீஸார், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும், வெடி வைக்காமல் பணிகள் தொடர நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.தேவூர் அருகே விவசாய பணிக்கு குழாய் பதிக்க வெடி வைத்து பள்ளம் தோண்ட எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார்.

SCROLL FOR NEXT