திருச்சி மாவட்டத்தில் ஊரக மற்றும் வேளாண்மை வளர்ச்சிப் பணிகளில் நபார்டு வங்கி தனது பங்களிப்பை அளித்து வருகிறது என நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் நா.மு.மோகன் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தின் ஊரக மற்றும் வேளாண்மை வளர்ச்சிப் பணிகளில் முக்கிய பங்கு வகிக்கும் நபார்டு வங்கி, திருச்சி மாவட்டத்தில் கிடைக்கப் பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து, அதன் அடிப்படையில் இம்மாவட்டத்தில் உள்ள வங்கிகளுக்கு ஆண்டுதோறும் கடன் திட்டத்தை வெளியிட்டு வருகிறது.
2021-22-ம் நிதியாண்டில் கடனுதவி வழங்க ரூ.10,811.19 கோடி மதிப்புள்ள திட்டம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
வேளாண்மையில் நீண்ட கால கடன் வழங்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து இத்திட்டத்தில் விளக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கடன் வசதிகள் வேளாண்மையில் அடிப்படை கட்டுமான வசதிகளைப் பெருக்கி விவசாயத்தை லாபகரமான வளம் நிறைந்த தொழிலாக மாற்ற உதவும்.
கடந்த 2020-21-ம் நிதியாண்டில் ஊரக கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.156.39 கோடியும், முக்கொம்பில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அணை கட்டுமான பணிக்காக ரூ.387 கோடியும், வங்கிகளுக்கான மறுநிதியுதவிக் கடனாக ரூ.1001.43 கோடியும் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு நடமாடும் ஏடிஎம் வாகனம் வாங்க ரூ.15 லட்சம், 12 விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொடங்கி நடத்துவதற்காக தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.33.42 லட்சம் என பல்வேறு திட்டங்களுக்கு நிதியுதவி செய்யப்பட்டுள்ளன. இதுதவிர மேலரசூர், கோவாண்டகுறிச்சி, நல்லவன்னிபட்டி, அஞ்சலம் மற்றும் பூலாஞ்சேரி ஆகிய பகுதிகளில் நீர்செறிவு மேம்பாட்டுத் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.