ஆதனூர் கிராமத்தில் நடைபெற்ற பொன் ஏர் திருவிழாவில் காளைகளை ஏரில் பூட்டி உழவுப்பணியை விவசாயிகள் தொடங்கினர். படம்: என்.ராஜேஷ் 
Regional01

சித்திரை முதல் நாளை முன்னிட்டு - பல்வேறு கிராமங்களில் பொன் ஏர் திருவிழா :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் சித்திரை முதல் நாளை முன்னிட்டு பொன் ஏர் திருவிழா நேற்று நடைபெற்றது.

பருவமழை உரிய காலத்தில் பெய்து விவசாயம் செழித்து நல்ல மகசூல் கிடைக்க வேண்டி, சித்திரை முதல் நாளில் நிலத்தில் உழவு செய்து, வேளாண் கருவிகளோடு விவசாயிகள் கூடி சூரிய பகவானை வழிபடுவது தான் பொன் ஏர் உழுதலின் நோக்கம்.

அதன்படி, ஓட்டப்பிடாரம் வட்டம் ஆதனூர் கிராமத்தில் ஆதனூர் மற்றும் மிளகுநத்தம் கிராம விவசாயிகள் சார்பில், பொன் ஏர் திருவிழா நேற்று நடைபெற்றது. வேளாண்மை துறை துணை இயக்குநர் (மாநில திட்டம்) சொ.பழனிவேலாயுதம், ஓட்டப்பிடாரம் வட்டார விவசாய விளைபொருள் உற்பத்தியாளர் கூட்டமைப்பு செயலாளர் மல்லுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் தங்களது விவசாயக் கருவிகளையும், காளை மாடுகளையும் மஞ்சள் நீரால் சுத்தப்படுத்தி அலங்கரித்து தீபாராதனை செய்து வழிபாடு நடத்தினர். பின்னர், காளை மாடுகளை வரிசையாக நிறுத்தி பொன் ஏர் பூட்டி உழவு செய்தனர். தொடர்ந்து நவதானியங்களையும், மானாவாரி பயிர் விதைகளையும் விதைத்து சூரியனை வழிபட்டனர்.

இதுபோல், கோவில்பட்டி நாகலாபுரம் அருகே என்.புதுப்பட்டியில் பொன் ஏர் பூட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு, விவசாயப் பணிகள் தொடங்கின. முன்னதாக உழவுக்கு காரணகர்த்தாவான காளை மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளில் மஞ்சள் தடவி, குங்குமமிட்டு, வெற்றிலைக் காப்பு, மாலை அணிவித்தனர். பின்னர், ஊர் பொது நிலத்தில் உள்ள வன்னி மரத்தடியில் பூஜை செய்தனர். ஊர் நாட்டாமை ஏ.ஜி.சுப்பையா மானாவாரி நிலத்தில் விதைகளை தூவி, உழவுப் பணியை தொடங்கி வைத்தார். உழுது வீடு திரும்பிய விவசாயிகளுக்கு வீட்டு பெண்கள் பானக்காரம் பானம் வழங்கினர். கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ.வரதராஜன் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி அருகே பிள்ளையார்நத்தம் கிராமத்தில் நடந்த பொன் ஏர் திருவிழாவில், தேசிய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ரெங்கநாயகலு, மாநில அமைப்புச் செயலாளர் அன்பழகன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT