தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தீவிர தடுப்பு நடவடிக்கைகளுக்காக நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருவேளை கபசுரகுடிநீர் விநியோகமும், கிருமிநாசினி தெளிப்பும், தூய்மைப் பணியும் நடைபெறுகிறது. வாகனம் மூலம் கரோனா தொற்று மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன.
வல்லுநர் குழுக்களின் பரிந்துரைகளின்படி ரத்தக் கொதிப்பு,இதயநோய், சிறுநீரக பாதிப்பு,புற்றுநோய் போன்ற தொற்றாநோய் பாதிப்புள்ள மக்கள் மற்றும்கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தைகள், முதியோர் போன்ற நோய்தொற்றினால் எளிதில் பாதிக்கக்கூடிய மக்களை கரோனா தொற்றுவராமல் தடுக்க களப்பணியாளர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தொடர் கண்காணிப்பு, வழிகாட்டு நெறிமுறையைப் பின்பற்றாத மக்களுக்கு அபராதம் விதித்தல் போன்ற பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பணியாளர்கள் மூலமாக வீடு வீடாக சென்றுஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டால் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர்.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் தொடர்ந்து காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் 89 இடங்களிலும், நேற்று 100 இடங்களிலும் காய்ச்சல்முகாம் நடைபெற்றது.
கோவில்பட்டி
விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் உத்தரவின் பேரில் காவல்துறை சார்பில், பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசங்கள், கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. ஆய்வாளர் ரமேஷ், உதவி ஆய்வாளர்கள் காசிலிங்கம், மணிமாறன் மற்றும் போலீஸார் பங்கேற்றனர்.
விளாத்திகுளம் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் கபசுர குடிநீர்வழங்கப்பட்டது. விளாத்திகுளம் காவல் உட்கோட்டத்தில் முகக்கவசங்கள் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களிடம் ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 700 அபராதம் வசூலிக்கப்பட்டது.