தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 8 மணிக்கு தீர்த்தவாரி, உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது. காலை 10 மணிக்குசுவாமி சண்முகருக்கு அன்னாபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜை, தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.
சித்திரை விசு கனி காணும் திருவிழாவை முன்னிட்டு உள்பிரகாரத்தில் கண்ணாடிக்கு முன்புவிளக்கேற்றி, காய்கனிகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. அதிகாலை முதலே பக்தர்கள் கடலில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர். பொதுமுடக்க கட்டுப்பாடுகளால் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 800 பக்தர்களுக்கு உணவுப் பொட்டலம் வழங்கப்பட்டது.
பக்தர்கள் சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்து,முகக்கவசம் அணிந்த பிறகே சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோல், தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோயிலில் நேற்று அதிகாலை கோயில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆறுமுக அர்ச்சனை, தீபாராதனை, மாடவீதியில் சுவாமி உலா வரும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அன்னாபிஷேம் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
நவ திருப்பதி கோயில்கள், புன்னையடி வனத்திருப்பதி, தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயில், வேம்படி இசக்கியம்மன் கோயில், தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பக்தர்கள் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.