தூத்துக்குடி உழவர் சந்தையில் விவசாயிகள் சார்பில், சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகள் நேரடி விற்பனை நிலையம் நேற்று தொடங்கப்பட்டது.
ஓட்டப்பிடாரம் வட்டார விவசாயவிளைபொருள் உற்பத்தியாளர் கூட்டமைப்பு சார்பில், பல்வேறுவகையான விவசாய விளைபொருட்கள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட விவசாயப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
தூத்துக்குடி நகர்ப்புற பகுதிமக்களுக்கு குறைந்த விலையில் தரமான தானியங்கள், சிறுதானியங்கள், பயறு வகைகள் மற்றும்மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் கிடைத்திடும் வகையில், தூத்துக்குடி உழவர் சந்தையில் நேரடிவிற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சித்திரை முதல் நாளானநேற்று இந்த விற்பனை நிலையம் திறக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சொ.பழனிவேலாயுதம் திறந்து வைத்தார்.
கூட்டமைப்பின் செயலாளர் மல்லுச்சாமி, தமிழ்நாடு கிராம வங்கி முன்னாள் மண்டல மேலாளர் சுப்பையா, உழவர் சந்தை வேளாண்மை அலுவலர் செல்வக்குமார், ஏற்றுமதி மைய மேலாளர் சுயம்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்வதால் இங்கு சோளம், மக்காசோளம், கம்புபோன்ற தானியங்கள் மற்றும் சிறுதானியங்கள், பாசிப்பயறு, உளுந்து போன்ற பயறு வகைகள் குறைந்த விலையில் கிடைக்கும். மேலும், மாவு பொருட்களும் இங்கே விற்பனை செய்யப்படுகின்றன. தொடர்ந்து சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகளில் இருந்து தயாரிக்கப்படும் உணவு பதார்த்தங்களும் விரைவில் இங்கே விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.