ஊத்தங்கரை அருகே கரோனா நோய் தடுப்பு குறித்து கிராமங்களில் தண்டோரா மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் கரோனா வால் இதுவரை 9156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது கரோனா நோய் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு தண்டோரா மூலம் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை அருகே உள்ள நொச்சிப்பட்டி ஊராட்சிக்குஉட்பட்ட கல்லூர், ஊனாம்பாளை யம், கணக்கம்பட்டி, பெரிய பொம்பட்டி, நொச்சிப்பட்டி, வைத்தி யானூர் உள்ளிட்ட கிராமங்களில் நேற்று தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தேவையில்லாமல் வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.
முகக்கவசம் அணியா விட்டால் கட்டாயம் ரூ.200 அபராதம் வசூலிக்கப்படும். ரேஷன்கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் வரும் பொதுமக்கள், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். மேலும், சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் உடனடியாக, அருகில் உள்ள சுகாதார நிலையத்தை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இதேபோல், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என தண்டோரா மூலம் தெரிவிக்கப் பட்டது.