தட்டக்கல் மலை அக்காலத்தில் பெருமுகை என அழைக்கப்பட்டது உறுதியாகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளதாக கிருஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் தலைமையில், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர், காவேரிப்பட்டணம் அருகே தட்டக்கல் மலையை ஆய்வு செய்தனர்.
இதுதொடர்பாக காப்பாட்சியர் கூறும்போது, பெருமுகையில் பைரவர் கற்சிலையை செய்து எழுந்தருளித்து சுனை ஒன்றையும்செப்பனிட்டு, இறைவனுக்கு படைக்கும் அரிசி முதலிய பொருட்க ளுக்காக, உதப்பிக்குட்டை என்னும் ஏரியை மான்வேலி என்னும் ஊரைச் சேர்ந்த பல்லவரையனான மலையன்என்பவர் தானமளித்த செய்தியை தெரிவிக்கிறது. இவர் செய்தளித்த பைரவர் சிற்பமானது இன்றும் பைரப்பன்கோயிலில் வழிபாட்டில் உள்ளது. இக்கல்வெட்டின் இடது மேற்புறம் பசுவும் கன்றும் கோட்டுருவமாக வரையப்பட்டுள்ளது.
பெருமுகை என்ற பெயர் இப்பகுதியில் கிடைத்த கி.பி. 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்தகல்வெட்டுக்களில் காணப்பட்டா லும், பெருமுகை எந்த இடத்தைக்குறிக்கிறது என்பது தெரியாமல் இருந்தது. இக்கல்வெட்டில்தான் இப்பெரு முகையில் என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள் ளது. எனவே தட்டக்கல் மலையே அக்காலத்தில் பெருமுகை என அழைக்கப்பட்டது உறுதியாகிறது.
இம்மலையை வடக்கிலிருந்து பார்த்தால் ஒரு பூவின் மொட்டுபோல் இருப்பதைக் காணலாம். அருகில் உள்ள பெரியமலையும் மொட்டு போலவே தோற்றமளிக் கிறது.முகை என்பது மொட்டைக் குறிக்கும். பெரிய மொட்டு போன்ற மலைகளைக் கொண்ட காரணத்தால் இப்பகுதியானது பெரு முகை என அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.
இக்கல்வெட்டுக் குறிப்பிடும் பல்லவரையனான மலையன் மான்வேலி என்ற ஊரின் தலைவனாவார். மான்வேலி என்ற ஊர் தற்போது எதுவெனத் தெரியவில்லை. உதப்பிக்குட்டை என்பது நீர் ஊற்றெடுத்து ததும்பி வழியும் குட்டை என பொருள் கொள்ளலாம். உதப்புதல் என்றால் பேசும்போது எச்சில் தெரித்தலைக் குறிப்பதாகும். ஊத்தங்கரை வட்டம் கொண்டம்பட்டி என்ற ஊரில் உள்ள கி.பி.9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் உதப்பியூர் என்ற ஊர் குறிப்பிடப்படுகிறது என்றார்.