விடுதலைக்கு முன்னரே மருத்துவமனையாக இருந்த திருப்பத்தூர் அருகேயுள்ள கண்டரமாணிக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தை மீண்டும் தரம் உயர்த்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத் தூர் அருகே கண்டர மாணிக்கத்தில் இந்திய விடுதலைக்கு முன் 1938-ம் ஆண்டு சுப்பிரமணியம் தர்ம மகப்பேறு மருத்துவமனை செயல்பட்டது. 1988-ம் ஆண்டு இந்த மருத்துவமனை தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையமாக செயல்பட்டு வருகிறது.
இதன் மூலம் கண்டர மாணிக்கத்தைச் சுற்றியுள்ள 50-க் கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன் பெறு கின்றனர். ஆரம்ப சுகாதார நிலை யமாக இருப்பதால் ஒரு மருத்துவர் மட்டுமே பணிபுரிகிறார். இரவு நேரங்களில் செவிலியர் மட்டுமே பணியில் உள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் திருப்பத்தூர், செம்பனூர் செல்ல வேண்டி உள்ளது. அவசர காலங்களில் செல்ல அவசர ஊர்தி வசதியும் இல்லை. மேலும் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் பழைய கட்டிடம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இடிக்கப்படாமல் உள்ளது. இதனால், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வருவோர் அச்சத்துடன் வர வேண்டியுள்ளது.
இதனால் பழைய கட்டிடத்தை இடிக்கவும், ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நைனார் பெ.பாலமுருகன் தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது: விடுதலைக்கு முன் இங்கு 20 படுக்கைகளுடன் மருத்துவமனை செயல்பட்டது. தற்போது வெறும் குளுக்கோஸ் மட்டுமே ஏற்றும் இடமாக உள்ளது.
அதை 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்ற வேண்டும். மேலும் 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும், என்று கூறினார்.