கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக பாரூரில் 27.2 மி.மீ மழை பதிவானது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இந்நிலை யில், நேற்று முன்தினம் மாலை போச்சம்பள்ளி, கிருஷ்ண கிரி, பாரூர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் மழை பெய்தது. மழையின் போது, காவேரிப்பட்டணம் ஒன்றியம் பாப்பாரப்பட்டி கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான பசு மாடு மீது இடி, மின்னல் தாக்கியதில் உயிரிழந்தது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி பாரூரில் 27.2, போச்சம்பள்ளியில் 9.5 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது.
கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக முற்றிலும் நின்று உள்ளது. அணையில் உள்ள தண்ணீர் 2-ம் போக சாகுபடிக்காக, வலது மற்றும் இடதுபுறக்கால்வாய் வழியாக திறந்துவிடப்படுகிறது. அதன்படி 125 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் மொத்த நீர்மட்டமான 52 அடியில் 39.35 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளது.