தூத்துக்குடியில் கரோனா தடுப்புபணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றன.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த காய்ச்சல் முகாம்களை அதிகளவில் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில், தூத்துக்குடி பகுதியில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற காய்ச்சல் முகாம் மற்றும் தடுப்பூசி போடும் பணியை,மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நேற்று ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மீண்டும் கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது. அங்கு கூடுதல் படுக்கை வசதி செய்யப்படுகிறது.
கோவில்பட்டி
கரோனா 2-வது அலை கட்டுப்பாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். கடைகளிலும், பொதுஇடங்களிலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.
திருவிழாக்கள், திருமணம் மற்றும் கூட்டம் அதிகமாக உள்ள நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்டோர் கோவில்பட்டி ஊருணித் தெரு மற்றும் ராம் நகரில் உள்ள நகர் நல மையங்கள், அரசு மருத்துவமனைக்குச் சென்று கரோனா தடுப்பூசியை இலவசமாக போட்டு பயனடைய வேண்டும். கரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதம்விதிக்கப்படும், என தெரிவித்துள்ளார்.
ஒரே நாளில் ரூ. 6 லட்சம் அபராதம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா விதிமுறைகள் மீறல் தொடர்பாக இதுவரை ரூ.31.57 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
வருவாய்த் துறையினர், பொது சுகாதாரத்துறையினர், காவல் துறையினர், தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி மற்றும் காயல்பட்டினம் நகராட்சி, பேரூராட்சி பணியாளர்கள் அபராதங்களை வசூலித்து வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் மட்டும் முகக்கவசம் அணியாத 2,738 பேரிடம் ரூ.5,47,600 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ. 30.12 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நேற்று முன்தினம் மட்டும் சமுக இடைவெளியை பின்பற்றாத 79 பேரிடம் ரூ.39,500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவரை 287 பேரிடம் ரூ.1,43,500 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் மொத்தம் ரூ.5,88,100 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் ரூ.31,57,800 வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகப்பட்சமாக காவல் துறை சார்பில் ரூ.24,24,600 வசூலிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்
நாகர்கோவில், கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல் உட்கோட்ட பகுதிகளில் கரோனா கட்டுப்பாடு களை மீறுவோர் மீது உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
முகக்கவசம் அணியாதோர், சமூக இடைவெளியை பின்பற்றாதோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
போலீஸாரும் சோதனை நடத்தி அபராதம் விதிக்கின்றனர். கடந்த 9-ம் தேதி முதல் மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் இருந்த 5,080 பேருக்கு தலா ரூ.200 வீதம் போலீஸார் அபராதம் விதித்துள்ளனர்.