Regional02

கரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் - ஈரோட்டில் உழவர் சந்தை 3 இடங்களில் பிரித்து விற்பனை :

செய்திப்பிரிவு

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஈரோட்டில் உழவர் சந்தை மூன்றாகப் பிரிக்கப்பட்டு, நேற்று முதல் செயல்படத் தொடங்கியது.

ஈரோடு நகரில் அதிக அளவில் பொதுமக்கள் கூடும் இடங்கள் கண்டறிப்பட்டு, அப்பகுதியில் கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, பொதுமக்கள் அதிக அளவில் கூடும் ஈரோடு உழவர் சந்தை பிரிக்கப்பட்டு, மூன்று இடங்களில் செயல்படத் தொடங்கியுள்ளது.

இதன்படி, உழவர் சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்ய வரும் விவசாயிகள் மூன்றாகப் பிரிக்கப்பட்டு, பெரியார் நகர், சம்பத் நகர் மற்றும் குமலன் குட்டை அரசுப் பள்ளி வளாகம் ஆகிய மூன்று இடங்களில் கடைகளை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. குமலன்குட்டை தொடக்கப்பள்ளி வளாகத்தில், போதிய இடைவெளியுடன், 40 கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதில், நேற்று 24 கடைகள் செயல்படத் தொடங்கின.

உழவர் சந்தைக்கு காய்கறி வாங்க வந்தவர்கள், கிருமிநாசினி மூலம் கைகள் சுத்தப்படுத்தப்பட்டு, வெப்பநிலை பரிசோதனை மேற்கொண்ட பின்பே அனுமதிக்கப்பட்டனர். முகக்கவசம் அணியாமல் வந்த பொதுமக்கள், உழவர் சந்தைக்குள் அனுமதிக்கப்படவில்லை.

இதுதொடர்பாக விவசாயிகள் கூறும்போது, ‘முதல்நாள் என்பதால், காய்கறிகள் விற்பனையாகுமா என்ற சந்தேகத்துடன் விவசாயிகள் பலர் இங்கு கடை அமைக்க முன்வரவில்லை. பொதுமக்களுக்கும் தகவல் சென்றடையாததால் கூட்டம் குறைவாக இருந்தது. அடுத்தடுத்த நாட்களில் விற்பனை அதிகரிக்கும் என நம்புகிறோம்’ என்றனர்.ஈரோடு குமலன்குட்டை அரசுப் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உழவர் சந்தையில் சமூக இடைவெளியுடன் காய்கறி விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT