கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்க வந்த, கிராமிய கலைஞர்கள், இசைக் கருவிகளை வாசித்து மக்களின் கவனத்தை ஈர்த்தனர். படம்: எஸ்.கே.ரமேஷ் 
Regional03

கிராமக் கோயில்களில் - திருவிழாக்கள் நடத்த அனுமதிக்க கலைஞர்கள் கோரிக்கை மனு :

செய்திப்பிரிவு

சிறிய மற்றும் கிராமக் கோயில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதிக்க வேண்டும் என 100-க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட கிராமியக் கலைஞர்கள் நலச்சங்கம், பாரம்பரிய பம்பை கை சிலம்பாட்டக் கலைஞர்கள் சங்கம், சிவசக்தி அனைத்து கலைஞர்கள் நலச்சங்கம், காமதேனு கிராமிய கலைக்குழு சங்கம், தெருக்கூத்து கலைஞர்கள் நலச்சங்கம், நாதஸ்வர தவில் இசைக்கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் ஆகிய சங்கங்களைச் சேர்ந்த கலைஞர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் கிராமியக் கலைஞர்கள், 3 லட்சம் குடும்பங்களுக்கு மேலாக உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய கலைநிகழ்ச்சிகள் 90 சதவீதத்திற்கு மேல் நடைபெறுவது கோயில் திருவிழாக்களில்தான். தற்சமயம் கோயில் திருவிழாக்கள் நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

கிராமியக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் அதிகமாக மக்கள் கூடும் பெரிய கோயில் திருவிழாக்களைத் தவிர்த்து, சிறிய மற்றும் கிராமக் கோயில்களில் மட்டுமாவது திருவிழாக்கள் மற்றும் கொடை விழாக்கள் நடத்தவும், சமூக இடைவெளியில் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும், அனுமதி வழங்க வேண்டும். மேலும், தங்களது வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தெருக்கூத்து கலைஞர்கள் வேடமணிந்து, பாரம்பரிய இசை கருவிகளை வாசித்தும் கவனத்தை ஈர்த்தனர்.

SCROLL FOR NEXT