சிங்காரப்பேட்டை காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய திமுகவினர் 20 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் கொட்டுக்காரன்பட்டி கிராமத்தில் சிலர் தகராறில் ஈடுபட்டுள்ளதாக, சிங்காரப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. இதனை தொடர்ந்து எஸ்ஐ கார்த்திகேயன் மற்றும் 2 போலீஸார், கொட்டுக்காரன்பட்டி கிராமப் பகுதிக்குச் சென்றனர். அங்கு கூட்டமாக நின்று கொண்டிருந்தவர்களை எஸ்ஐ கார்த்திகேயன் மற்றும் போலீஸார் விசாரித்து கலைந்து செல்லுமாறு கூறினார். அப்போது அங்கிருந்த சிலருக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், திமுகவைச் சேர்ந்த கற்பூரசுந்தர பாண்டியன் (33), மோகன் (37), திமுக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளரும், ஒன்றியக் குழு உறுப்பினருமான குமரேசன் உட்பட 20 பேர், எஸ்ஐ கார்த்திகேயனை தாக்கியுள்ளனர். அங்கு நிகழ்வுகளை வீடியோ பதிவு செய்த போலீஸாரிடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். காயம் அடைந்த எஸ்ஐ-யை, போலீஸார் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனைத் தொடர்ந்து கெட்டுக்காரன்பட்டியில் டிஎஸ்பி ராஜபாண்டியன், இன்ஸபெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக எஸ்ஐ கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில், திமுகவைச் சேர்ந்த 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.