Regional03

ஜனவரியில் பெய்த தொடர் மழையால் நிலக்கடலை மகசூல் பாதிப்பு : உற்பத்தி செலவைக் கூட எடுக்க முடியாமல் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் கவலை

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக நிலக்கடலை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நிகழாண்டு மார்கழி பட்டத்தில் மாவட்டத்தில் 4,000 ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருந்தது. ஆனால், கடந்த ஜனவரி மாதம் பெய்த வரலாறு காணாத தொடர் மழை காரணமாக நிலக்கடலைப் பயிர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டன.

அந்த வகையில், 1,000 ஏக்கரிலான பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில், எஞ்சியிருந்த 3,000 ஏக்கரில் தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ஒரத்தநாடு, திருவோணம், குருங்குளம், மருங்குளம், திருக்காணூர்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கடலைப் பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால், மகசூல் பெருமளவு குறைந்துள்ளதால், விவசாயிகள் உற்பத்தி செலவைக் கூட எடுக்க முடியாமல் கவலை அடைந்துள்ளனர். மேலும், நிலக்கடலையைப் பறிக்க போதிய கூலித் தொழிலாளர்கள் கிடைக்காததால், அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதிகளிலிருந்து கூலித் தொழிலாளர்களை வரவழைத்து, இரவு பகலாக நிலக்கடலைகளை கொடிகளிலிருந்து பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட மானாவாரி பகுதி விவசாயிகள் சங்கச் செயலாளர் து.வைத்திலிங்கம் கூறியது: கடந்தாண்டு நிலக்கடலை ஏக்கருக்கு 300 கிலோவுக்கு குறையாமல் மகசூல் கிடைத்தது. விலையும் கிலோ ரூ.93-க்கு விற்பனையானது. ஆனால், நிகழாண்டு அதிக மழை காரணமாக, வயலில் தண்ணீர் தேங்கி நிலக்கடலை மகசூல் பெருமளவில் குறைந்துவிட்டது. விலையும் கிலோ ரூ.80-க்கு கொள்முதல் செய்யப்படுவதால் உற்பத்திச் செலவு கூட கிடைக்கவில்லை. மேலும், நிலக்கடலையை விற்பனை செய்ய தனியார் கடலை அரைவை மில்களையே விவசாயிகள் நம்பியிருக்க வேண்டியுள்ளது. எனவே, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் நிலக்கடலையை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT