தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி பாசன பகுதிகளுக்கு முன்கார் சாகுபடிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக, தமிழ்நாடு விவசாய சங்கத்தின் ஏரல் தாலுகா தலைவர் எஸ்.வெள்ளச்சாமி மற்றும் செயலாளர் க.சுப்புதுரை ஆகியோர் தலைமையில் விவசாயிகள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விபரம்: தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் வட்டம், தாமிரபரணி பாசனத்தில் இடம் பெற்ற 8-வது அணைக்கட்டு வைகுண்டம் அணைக்கட்டு ஆகும். இவற்றில் இருந்து பிரியும் தென் மற்றும் வடகால் மூலம் ஏராளமான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது இந்த பகுதியில் பிசான சாகுபடி முடிவடைந்த நிலையில் பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளின் நீர் இருப்பை கருத்தில் கொண்டு முன்கார் சாகுபடிக்கு அனுமதி அளிக்க வேண்டும். தென் கால் மற்றும் வடகால் பாசனத்தில் உள்ள ஏ குரூப் நஞ்செய் நிலங்களான 9,880 ஏக்கர் பகுதிக்கும் முன்கார் சாகுபடிக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
இது தொடர்பாக, அணையில் இருந்து தண்ணீர் திறக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி பெற்றுத் தர வேண்டும். இதன்மூலம், இப்பகுதி விவசாயிகள் பயன் பெறுவார்கள் என, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏ குரூப் நஞ்செய் நிலங்களான 9,880 ஏக்கர் பகுதிக்கும் முன்கார் சாகுபடிக்கு அனுமதி அளிக்க வேண்டும்.