சேலம் மாவட்டத்தில் முகக் கவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடியவர்கள் மீது நேற்று முன்தினம் ஒரே நாளில் 2,292 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரூ.4.65 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. மக்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து பொது இடங்களில் நடமாட வேண்டும், சமூக இடைவெளியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்தில் முகக் கவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடுபவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கை யில், சேலம் மாவட்ட, மாநகர போலீஸார் மேற்கொண்டனர்.
சேலம் மாவட்டத்தில் 38 காவல் நிலையங்களின் இன்ஸ்பெக்டர் கள் தலைமையில், அந்தந்தப் பகுதிகளில், போலீஸார் சோதனைமேற்கொண்டனர். அதில், பொது இடங்களில் முகக்கவசம் அணி யாமல் வந்த 1,058 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, அவர் களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், பொதுஇடங்களில் சமூக இடைவெளி யின்றி கூடிய 22 நபர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
சேலம் மாநகரில் 14 ரோந்துப் பிரிவுகளைச் சேர்ந்த போலீஸார், நகரின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு மேற்கொண்டு, முகக் கவசம் அணியாமல் வந்த 1,212 நபர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர். மாவட்டம் முழுவதும் 2,292 நபர்களிடம் நேற்று ஒரே நாளில் அபராதமாக மொத்தம் ரூ.4 லட்சத்து 65 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.
முகக் கவசம் அணியாமல் நடமாடுபவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கும் பணியில் போலீஸார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.